Monday, April 16, 2012

IPL5 -RCB vs RR -போலி ராயலை வீழ்த்திய நிஜ ராயல்கள்!
பெங்களூர் அணி மூன்றில் 2 ஆட்டங்கள் தோல்வியடைந்திருந்த நிலையில், இந்த ஆட்டம் சுவாரசியமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ராஜஸ்தான் அணி, முதலில் பேட் செய்து, சகீர், முரளி மற்றும் வெட்டோரி என்ற 3 Veteran-களின் அனுபவத்திறமை வாய்ந்த பந்து வீச்சின் காரணமாக, 13 ஓவர்களின் முடிவில், 82-1 (டிராவிட் விக்கெட் இழப்பு) என்ற மிகச் சாதாரண நிலையில் இருந்தது! ரஹானேயும், ஷாவும் ஆடிக்கொண்டிருந்தனர்.

சகீர் 3-1-10-0
முரளி 3-0-18-0
வெட்டோரி 3-0-14-1


14வது ஓவரில், ரஹானேவுக்கு கொலவெறி பிடித்து, அரவிந்தின் மிக சராசரி பந்து வீச்சில், 6 பவுண்டரிகள் விளாசினார். இதில் ஒன்று கூட காட்டுத்தனமான ஷாட் கிடையாது! ஒரே ஓவரில் ரன்ரேட் 6.3லிருந்து 7.6க்கு எகிறியது :-) 16, 17 மற்றும் 18வது ஓவர்களில், ஷாவும் ரஹானேவுடன் சேர்ந்து கொண்டு கெய்ல், வினய், முரளி பந்துவீச்சை துவம்சம் செய்ததில், சின்னசாமி அரங்கில் ரன் மழை பெய்தது! இந்த 3 ஓவர்களில் 62 ரன்கள்! அரங்கில் பல RCB ரசிகர்கள் மூர்ச்சை அடைந்த நிலைக்கு சென்று விட்டனர் :-)

இந்த ரணகளத்திலும், 19வது ஓவரை சகீர் மிகச் சிறப்பாக வீசினார். 4 உதிரிகளை தவிர்த்து, அவர் 5 ரன்கள் மட்டுமே கொடுத்து ஷாவின் விக்கெட்டையும் வீழ்த்தினார். 20வது ஓவரில் ரஹானே தனது சதத்தை (58 பந்துகள்) பூர்த்தி செய்தார். இதை ஐபிஎல் ஆட்டங்களின் மிக நேர்த்தியான சதம் என்று கூறுவேன். சின்னசாமியில் புயலடித்து ஓய்ந்தது போல இருந்தது. இறுதி 7 ஓவர்களில் ராஜஸ்தான் எடுத்தது 113 ரன்கள் (பிரதி ஓவர்: 16.1) !!!!!!!!! ராஜஸ்தான் மொத்த ஸ்கோர் 195.

கோலி, ரஹானே இருவருமே திறமைசாலிகளாக இருப்பினும், Temperament-ஐ பொறுத்த அளவில், ரஹானே பெட்டர் என்று தாராளமாக கூறலாம். ஜடேஜா, முரளிவிஜய் போன்றவர்கள் ரஹானேவிடம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது!

பெங்களூர் அணியிடம் பலமான பேட்டிங் (கெய்ல், அகர்வால், கோலி, டிவிலியர்ஸ்..) இருப்பதால், “துரத்தல்” சுவாரசியமாக இருக்கும் என்று எல்லாரையும் போல நானும் நம்பினேன்! 4 ஓவர்களில், பெங்களூர் 38-0. அகர்வால் 30, கெய்ல் -8 !!! பங்கஜ் சிங் வீசிய 5 ஓவரில் துரத்தல் சற்றே தடம் புரண்டது. அகர்வால், கெய்ல் இருவரும் வீழ்ந்தனர். ஸ்கோர் 42-2. கோலி, டிவிலியர்ஸ் ஜோடி சேர்ந்து ஆடிக் கொண்டிருந்தனர். 8 ஓவர்களில் 63-2.

9வது ஓவரில், மொகிந்தர் அமர்நாத் ஸ்டைல் “பொய்” பந்துவீச்சு எக்ஸ்பர்ட் சித்தார்த் த்ரிவேதியின் 107 கிமீ வேகப்பந்தை டிவிலியர்ஸ் ஸ்டம்ப்பில் இழுத்து விட்டுக் கொண்டார்! தனது அடுத்த ஓவரில் (11வது) த்ரிவேதியின் மற்றொரு மிதவேகப்பந்து கோலியின் நடு ஸ்டம்பை தகர்த்தது! ஸ்கோர் 79-4. என்னளவில், இது RCB சவப்பெட்டியில் அறையப்பட்ட கடைசி ஆணி! 2 ஆண்டுகளுக்கு முன் ரொம்ப பேசப்பட்ட சௌரப் திவாரி, எப்போதும் போல சொதப்பி (17 of 16) த்ரிவேதியின் 4வது ஓவரில் Clean Bowled. அதே ஓவரில் வெட்டோரியும் அவுட்(Clean Bowled). த்ரிவேதி 4-0-25-4. 15 ஓவர் முடிவில், 105-6, தேவையான ரன்ரேட் 18.20. ஆமென்!

யோஹன் போத்தாவின் அடுத்த (16வது) ஓவரில், மொஹமத் கைஃப் அவுட்டானதும், போத்தா தனது மூக்கின் மேல் இருந்த வியர்வையை எடுத்து அவருக்கு “ப்ரோஷணம்” பண்ணி அனுப்பி வைத்த காட்சி நல்ல நகைச்சுவை ;-) அதே நேரம், அரங்கில் இருந்த சித்தார்த் மால்யா தலையை ஆட்டியபடி சோகமாக அமர்ந்திருந்ததும், ரசிக்கத் தக்கதாய் இருந்தது! அவருடன் இப்போதெல்லாம் தீபிகா படுகோனை காண முடிவதில்லை. ஒருவேளை தீபிகா கழட்டி விட்டிருப்பாரோ? அப்படியிருப்பின், தீபிகா தனது வாழ்வில் எடுத்த ஒரு சிறந்த முடிவு அது என்பதில் ஐயமில்லை :)

17வது ஓவரில் வினய்குமாரின் விக்கெட்டை எடுத்த அமித் சிங், அந்த ஓவரின் கடைசி பந்தில், ஒரு பவுண்டரி கொடுத்ததற்கு (அதுவும், 3 ஓவர்களில் 76 ரன்கள் தேவை என்ற சூழலில்) மிகவும் வருத்தப்பட்டு கொண்டது, ராஜஸ்தான் அணியின் Spirit-க்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. பாவம் முரளிதரன்! இத்தனை பேட்டிங் ஜாம்பவான்கள் உள்ள RCB அணியில் தான் பேட் பிடிக்க நேரிடும் என்று எதிர்பார்த்திருக்கவே மாட்டார்! முரளி 20வது ஓவரில் அவுட்டாகி, ராஜஸ்தான் 59 ரன்களில் பெருவெற்றியை பெற்றது! Rajasthan Royals had Warne as captain and now Rahul Dravid, 2 contrasting captains but inspiring leaders in their own way!

இப்படியாக, நிஜமான ராயல்கள் போலி ராயல் அணியை (அணியின் பெயரில் ராயலும், flamboyant ஓனரும், உலகமகா கிரிக்கெட்டர்களும் இருந்தால் மட்டும் போதுமா?! ) மண்ணைக் கவ்வ வைத்தனர்!

0 மறுமொழிகள்:

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails